latest news
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்!.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!…
நேற்று காலை முதலே தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம். முதலில் ஒருவர், அதன்பின் 3 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின் இறந்து போன 3 பேரின் மரணத்திற்கு போன சிலர் அங்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின் பலி என்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. இப்போது வரை 50 பேர் விஷ சாராயத்திற்கு பலியாகியுள்ளனர். 50 பேரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். சுமார் 10 பேருக்கு கண் பார்வை போய்விட்டது. இன்னும் 50 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, பலி என்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக 6க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், பல குழந்தைகள் தங்களின் அப்பா, அம்மா அல்லது இரண்டு பேரையும் இழந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாத பராமரிப்புத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும்’ என அறிவித்திருக்கிறார். மேலும், பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தை உள்ளிட்ட அனைத்துச் செலவுகளைம் தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்கும்’ எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.