Cricket
`எப்பவும் நான் ராஜா’ – முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்த இங்கிலாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான குரூப் 8 சுற்று போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி முதல் டீமாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
பார்படாஸில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் களமிறங்கிய அமெரிக்க அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. பவர் பிளேவில் 2 விக்கெட்டை இழந்து 48 ரன்கள் எடுத்த அந்த அணியின் மிடில் ஆர்டரை அடில் ரஷீத் பதம் பார்த்தார்.
ஒரு கட்டத்தில் கோரி ஆண்டர்சனும் ஹர்மீத் சிங்கும் அமெரிக்காவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19-வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் உள்பட 5 பந்துகளில் மீதமிருந்த நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. பில் சால்ட் நிதானம் காட்ட, மறுமுனையில் இருந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினார். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் குவித்த இங்கிலாந்து, 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், இந்த உலகக் கோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.