tech news
கையோடு கொண்டுபோகலாம்.. அசத்தும் கேமிங் கன்சோல் அறிமுகம்
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் கையடக்க கேமிங் கன்சோல்- லெனோவோ லீஜியன் கோ அறிமுகம் செய்தது. இந்த கன்சோலில் 8.8 இன்ச் QHD+ ஸ்கிரீன், அதிகபட்சம் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. கேமிங் பிரியர்கள் வெளியில் செல்லும் போதும், கையில் வைத்து விளையாடும் வகையில் இந்த கன்சோல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கன்சோலில் AMD Z1 எக்ஸ்டிரீம் APU, 16GB LPDDR5X 7500MHz ரேம், 512GB NVMe M.2 2242 PCIe ஜென் 4 SSD, UHS-II மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கூடுதலாக 2TB வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கேமிங் சாதனம் என்பதால், இதில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் 79 பிலேடு ஃபேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். இதில் உள்ள கூலிங் ஃபேன் குறிப்பிட்ட செட்டிங்கில் பயன்படுத்தும் போது மட்டும் அதிக ஒலியெழுப்பாது என தெரிகிறது.
லெனோவோ லீஜியன் கோ-வின் கண்ட்ரோலர்களில் ஹால் எஃபெக்ட் ஜாய்ஸ்டிக்குள் உள்ளன. இதனால் கேமிங்கின் போது ஜாய்ஸ்டிக் ட்ரிஃப்ட் ஆகுமோ என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இத்துடன் டிராக்பேட், டி பேட் மற்றும் மவுஸ் வீல் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், கேமிங் அனுபவத்தை அதிகப்படுத்தும் RGB லைட்டிங் உள்ளது.
இந்தியாவில் லெனோவோ லீஜியன் கோ 16GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாதனம் ஷேடோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் லெனோவோ வலைதளங்களில் ஜூலை 1 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட லெனோவோ ஸ்டோர்களிலும் இதன் விற்பனை நடைபெறும்.