latest news
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை!.. மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல்..
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசியல் அலட்சியம் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
எனவே, தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் எனவும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டபையில் கூறினார். மது விலக்கு திருத்த சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடுமையான சட்டங்களுடன் கூடிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ‘தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படும் எரி சாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாரய விற்பனை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசிம் என்றே அரசு கருதுகிறது.
அந்த மதுவை குடித்து மரணம் ஏற்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருப்பதோடு ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்பது போல சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களை செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, இதற்கு பயன்படுத்தப்படும் இடங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.