Connect with us

Cricket

டி20 உலகக் கோப்பை: தூங்கியதால் இந்திய போட்டியை தவறவிட்ட வங்காளதேசம் வீரர்?

Published

on

வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது அதிக நேரம் தூங்கியதால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டி தினத்தன்று, தஸ்கின் அகமது தங்கும் விடுதியில் தனது அறையில் நீண்ட நேரம் தூங்கியதாக தெரிகிறது. அணி நிர்வாகத்தினர் எவ்வளவு முயன்றும் தஸ்கினை தொடர்பு கொள்ள முடியாததால், அவரை விட்டுவிட்டு அணி வீரர்கள் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

வெகு நேரம் தூங்கி எழுந்த தஸ்கின் அதன்பிறகு அவர் தனியாக புறப்பட்டு மைதானத்திற்கு சென்று அணியுடன் இணைந்து கொண்டார். எனினும், அன்றைய போட்டியில் தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிராக களமிறங்கவில்லை.

இதுகுறித்து வங்காளதேசம் அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களில், “தஸ்கின் அன்று அணியின் பேருந்தை தவறவிட்டு, தாமதமாக அணியுடன் இணைந்துகொண்டார் என்பது உண்மை தான். எனினும், அவர் ஏன் அந்த போட்டியில் விளையாடவில்லை என்பதை அணியின் பயிற்சியாளர் தான் கூற வேண்டும்.”

“அவருக்கும் பயிற்சியாளருக்கும் ஏதேனும் பிரச்சினை இருந்ததா, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் அணி வீரர்கள் மற்றும் அனைவரிடமும் நேரத்திற்கு வரமுடியாமல் போனதற்கு மன்னிப்பு கோரினார். மேலும், இதனை பெரிய விஷயமாக மாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்” என்று கூறப்பட்டுள்ளன.

வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா (50), ரோகித் சர்மா (23), விராட் கோலி (37), ரிஷப் பண்ட் (36) மற்றும் ஷிவம் துபே (34) ரன்களை குவித்தனர்.

google news