latest news
இந்த மாதமும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் காத்திருந்த ஷாக்… இதெல்லாம் நியாயமே இல்லப்பா…
தமிழக நியாயவிலை கடைகளில் இரண்டு மாதங்களாக பாமாயில், துவரம் பருப்பு கொடுக்கப்படாத நிலையில் இந்த மாதமும் வழங்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் நியாயவிலை கடைகளில் ரேஷன் கார்டுக்கள் மண்ணெண்ணெய், பாமாயில், அரிசி, சக்கரை, துவரம் பருப்பு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. முதலில் மண்ணெண்ணெய் சரியாக கொடுக்கப்படாமல் இருந்தது. அடுத்து இரண்டு மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் விநியோகமும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் டெண்டர் பிரச்னை நிலவி வருகிறது. இதை எதிர்கட்சிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. கொள்முதல் இறுதி செய்யப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான பருப்பை பெற்றுக்கொள்ளாத குடும்பத்தினர் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
ஆனால் ஜூன் மாதம் முடிந்து ஜூலையும் பிறந்துவிட்ட நிலையில் இந்த மாதமும் பாமாயில் மற்றும் பருப்பு விநியோகம் தொடர்ந்து தடை பெற்றுள்ளது. வட மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகத்தின் தலைநகரான சென்னை, காஞ்சிபுரத்திலே இதே பிரச்னை உருவாகி இருக்கிறது.
பல நியாய விலை கடைகளில் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரேஷன் பருப்பையே நம்பி வாழ்ந்த மக்கள் மூன்று மாதமாக கடை பருப்பை வாங்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் பருப்பு மற்றும் பாமாயில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.