latest news
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?
ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று கூறி மக்களிடம் மோசடி செய்த புகாரில் my v3 ads நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில் my v3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், கோவையில் அனுமதியின்றி மக்கள் கூட்டத்தைக் கூட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது.
மேலும், முறையற்ற பணபரிவர்த்தனை, சிட் பண்ட் மோசடிப் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழும் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட my v3 ads நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டது. கோவை குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சக்தி ஆனந்தன் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, சென்னை பொருளாதார சிறப்புக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அவரை சரணடையுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் முன்னிலையில் சக்தி ஆனந்தன் இன்று சரணடைந்தார். இந்த வழக்கில் அவரை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். வரும்காலங்களில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்தவொரு சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதாலேயே நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் சக்தி ஆனந்தன் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.