latest news
நீதிபதியாக அல்ல, ஒரு சகோதரியாக சொல்கிறேன்… வேறு இடத்தை கூறுங்கள்… நீதிபதி வேண்டுகோள்…!
ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேறு இடத்தை கூறுங்கள் என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்து இருக்கின்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவரை எட்டு பேர் கொண்ட மர்மக்குழு அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருந்தனர். இதை தொடர்ந்து ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அவரின் உடல் பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் எதுவும் பதில் கொடுக்காத காரணத்தினால் இந்த கோரிக்கை தொடர்பாக அவசர விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி இடம் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை தனி நீதிபதி பவானி சுப்பராயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி என கூறி வரைபடங்களை அரசு சமர்ப்பித்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் வக்கீல் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியதாக வாதம் இடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல் தெரிவித்திருந்ததாவது தேமுதிக அலுவலகம் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடம். இதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு நீங்கள் அடக்கம் செய்யலாம் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது மயானம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் உடலை அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்பு பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு பின்னர் வேறு இடத்தில் மணி மண்டபம் கட்டிக் கொள்ளலாம். நாளை வீரவணக்கம் போன்ற நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது?
ஏற்கனவே ஹஜ்ராஜ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை விசாலமான இடம் இருந்தால் கூறுங்கள். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன். இதனை ஒரு நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். ஆம்ஸ்ட்ராங் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்யுங்கள். பேசிவிட்டு வாருங்கள், நான் இங்கேயே இருக்கின்றேன். என்று கூறி வழக்கை 10:30 மணிக்கு விசாரிக்கிறேன் என்று கூறி ஒத்தி வைத்தார்.