டிராவிட்-க்கு முன்பே பரிசுத் தொகையை குறைத்து கொள்ள முன்வந்த ரோகித் சர்மா

0
55

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டி20 உலகக் கோப்பை வென்றதற்காக பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகையை குறைத்துக் கொள்வதாக தெரிவித்தார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டைப் பெற்றது. பலரும் ராகுல் டிராவிட் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல என்றும், வேறு சிலர் இதனால் தான் அவர் டிராவிட் என்றும் புகழாரம் சூட்டினர்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ. 125 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. இதில் ராகுல் டிராவிட்-க்கு ரூ. 5 கோடியும் மற்ற பயிற்சியாளர்களுக்கு ரூ. 2.5 கோடியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. எனினும், டிராவிட் இதை ஏற்க மறுத்து தனக்கும் ரூ. 2.5 கோடி போதும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராகுல் டிராவிட்-க்கு முன்பே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பரிசு தொகையை உதவியாளர் குழுவுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்தார் என்று கூறப்படுகிறது. பயிற்சியாளர் குழுவில் சிலருக்கு குறைந்த தொகையே வழங்கப்படுவதாக அறிந்ததை அடுத்து, ரோகித் சர்மா தனது பரிசு தொகையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளார் என்று தெரிகிறது.

டி20 உலகக் கோப்பை வெற்றியில் யாருக்கும் குறைந்த தொகை பரிசாக கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் தான் ரோகித் சர்மா தனக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசு தொகையை பகிர்ந்து கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது. பரிசுத் தொகை பிரிக்கப்பட்ட விவகாரத்தில் ரோகித் சர்மா முழு மகிழ்ச்சி அடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே அவர் தனது தொகையை பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நல்ல தொகை கிடைக்க வேண்டும் என்று விரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து உதவியாளர் குழுவில் உள்ள அனைவருக்கும் ரூ. 2 கோடி வழங்குவதாக பிசிசிஐ முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here