latest news
தமிழ்ல படிக்க ஆசை; சீட் கொடுக்கல… குமுறும் நாகாலாந்து மாணவி!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனக்கு தமிழ் படிக்கத் தெரிந்தும் தமிழில் படிக்க ஆசைப்பட்டும் பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகாலாந்து மாணவி பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.
நாகாலாந்து மாணவி
நாகாலாந்தைச் சேர்ந்த ரூத் என்பவர் சிங்கம்புணரியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர், தனது இரண்டு மகள்களையும் இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்க வைத்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா லாக்டவுன் நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றவர் சமீபத்தில் திரும்ப வந்திருக்கிறார்.
இந்தநிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் மூத்த மகள் அக்மாலாவுக்கு பதினொன்றாம் வகுப்பில் சேர அட்மிஷன் கேட்டிருக்கிறார். பள்ளி தரப்பில் கேட்ட உரிய சான்றிதழ்களை அளித்தும் அவர்கள் சீட் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்மாலா, `அவங்க கேட்ட எல்லா சான்றிதழ்களையும் கொடுத்துட்டோம். ஆனாலும், ஆட்சியர் அலுவலகத்துல கேட்கணும் அது, இதுனு சொல்லி சீட் கொடுக்க மாட்டேங்குறாங்க. எனக்குத் தமிழ் தெரியும். தமிழ்ல படிக்கணும்னு ஆசை. ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்க’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.