Connect with us

latest news

ரூ.2 கோடி; ரவுடியுடன் கூட்டுசேர்ந்த போலீஸ்… மதுரை கடத்தல் பின்னணி இதுதான்!

Published

on

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரவுடியுடன் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது.

பள்ளி மாணவன் கடத்தல்
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது 14 வயது மகனையும் அவன் பயணித்த ஆட்டோ டிரைவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆம்னி வேனில் கடத்தியது. இதையடுத்து, அந்த மாணவனின் செல்போனில் இருந்து தாய் ராஜலட்சுமியைத் தொடர்புகொண்ட கும்பல், 2 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதைக்கேட்டுப் பதறிய ராஜலட்சுமி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் மகனுக்குப் பதில் தன்னைப் பிணைக் கைதியாக வைத்துக்கொள்ளுமாறும் கெஞ்சினார். இவர்கள் போனில் பேசிய இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மாணவனையும் ஆட்டோ டிரைவரையும் கடத்திய ஆம்னி வேன் பயணித்த பாதையை சிசிடிவி காட்சிகள் உதவியோடு டிரேஸ் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த கும்பல், மாணவனையும் ஆட்டோ டிரைவரையும் செக்காணூரணியை அடுத்த கிண்ணிமங்கலம் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு தப்பியதாகத் தெரிகிறது.

இதற்கிடையே சிசிடிவி காட்சிகள் உதவியோடு ஆம்னி வேனைக் கண்டுபிடித்து போடி அருகே செந்தில்குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது. விசாரணையில் செந்தில்குமார் போலீஸாக இருந்ததும், பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், தூத்துக்குடியைச் சேந்த ரவுடி ஒருவருடன் சேர்ந்து தனக்கு வேண்டிய ஒரு பெண்மணிக்காக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

பின்னணி என்ன?

0ராஜலட்சுமியின் கணவர் ராஜ்குமார் அந்தப் பெண்மணியிடமிருந்து வணிக வளாகம் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். இதில், ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு ராஜலட்சுமி குடும்பத்தினர் பணம் கொடுக்க வேண்டி இருந்ததாகவும், பின்னர் பணம் இல்லாததால் அதைக் கொடுக்க இயலாமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒன்றரை கோடி ரூபாய்

கடன் ஒன்றரை கோடியோடு கடத்தல் கும்பலுக்குக் கொடுக்க வேண்டிய பணம் என இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். போன் ரெக்கார்டுகளை வைத்து அந்தப் பெண்மணியையும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள், நெல்லை ரஹ்மான்பேட்டையைச் சேர்ந்த அப்துல் காதர், தென்காசி சிவகிரியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *