Cricket
என் பென்ஷனையும் எடுத்துக் கோங்க, அன்ஷூமானுக்கு உதவுங்க.. பிசிசிஐ-க்கு கபில் தேவ் கடிதம்
இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்றுக் கொடுத்த கேப்டன் கபில் தேவ் பிசிசிஐ-க்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடிதத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் தனது சக கிரிக்கெட்டர் அன்ஷூமான் கெய்க்வாட்-க்கு உதவ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த கடிதத்தில் அவர் தனது சக வீரர்களான மொகிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டில், திலீப் வெங்சர்கார், மதன் லால், ரவி சாஸ்திரி மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகியோரும் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டும் பணிகளில் மும்முரம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
மேலும், பிசிசிஐ இந்த விவகாரத்தில் முன்னாள் இந்திய அணி வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கெய்க்வாட்-க்கு நிதி உதவியை வழங்கும் என்ற நம்பிக்கை தன்னிடம் இருப்பதாக கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் வருத்தமாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. என்னுடன் விளையாடிய சக வீரர் அன்ஷுவை தற்போது இந்த நிலையில் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. யாரும் இத்தகைய கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. நிர்வாகம் அவரை பார்த்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. அன்ஷுவுக்கு கிடைக்கும் எந்த உதவியும் மனதளவில் இருந்து வரவேண்டும்.”
“அதிவேக பந்துவீச்சாளர்களை களத்தில் எதிர்கொண்ட போது, பந்துகளை தனது முகம் மற்றும் மார்பில் வாங்கிக் கொண்டவர் அவர். தற்போது அவருக்கு துணை நிற்க வேண்டிய சூழல் இது. நமது கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கைவிட மாட்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் அவர் விரைந்து குணம்பெற்று திரும்ப பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்,” என்று கபில் தேவ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கபில் தேவ், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றபட்சத்தில் தனது பென்ஷன் தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.