Cricket
ஓபனிங் இறங்கிய அஸ்வின்.. 20 பந்துகளில் 45 விளாசி அசத்தல்
சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமான சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ரவிசந்திரன் அஸ்வின். தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் அபார பேட்டிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் 20 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் அடங்கும். இந்த இன்னிங்ஸில் இவரது ஸ்டிரைக் ரேட் 225 ஆகும். போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோல்வியை தழுவிய போதிலும், அஸ்வினின் இன்னிங்ஸ் அனைவரையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதிய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 7 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை விளாசியது.
7 ஓவர்களில் 65 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் நாராயண் ஜெகதீசன் மற்றும் பாபா அபரஜித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 65 ரன்களை விளாசியது. இதன் மூலம் அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.