india
தமிழகத்தை போலவே முடிவெடுத்த கர்நாடகா?…நீட் விவகாரத்தில் நிகழ்ந்த கருத்தொற்றுமை…
மருத்துவப்படிப்பில் சேர நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற நடைமுறை இந்தியாவில் இருந்து வருகிறது. இந்த தேர்விற்கான வினாத்தாள் கசிந்ததாகவும், அதில் முறைகேடுகள் ஏற்பட்டதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகள் வைத்த முக்கிய குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது.
அன்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது என விளக்கமளித்து உரையாற்றியிருந்தார்.
தமிழகத்திற்கு தகுதித் தேர்வான நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
தேசிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களின் முதல்வர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேற்கு வங்க சட்டமன்றத்தில் நீட் தேர்வு முறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல கர்நாடக மருத்துவக்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை கொண்டு வந்தார். அவை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறைக்கு பதிலாக பொது நுழைவுத் தேர்வு முறையை கொண்டு வர வேண்டும் என கர்நாடக அரசு நீட் எதிர்ப்பு தீர்மானத்தில் சொல்லியிருக்கிறது.