Cricket
T20 WorldCup: 4 ஓவருமே மெய்டன்; 3 விக்கெட் வேற… ஆறுதல் வெற்றியுடன் நியூஸி. பௌலர் சாதனை!
பாப்புவா நியூகினியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்காவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நியூஸிலாந்து அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. இந்தநிலையில், டரௌபாவில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியாக பாப்புவா நியூகினியாவை எதிர்க்கொண்டது.
டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த நியூஸிலாந்து அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. பவர் பிளேவில் 16 ரன்களை மட்டுமே எடுத்த பாப்புவா நியூகினியா 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதன்பின்னர், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பி.என்.ஜி சார்பில் சார்லஸ் அம்மினி அடித்த 17 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர்.
நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன், தான் வீசிய 4 ஓவர்களையும் மெய்டனாக வீசியதோடு 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். தனது கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய டிரெண்ட் போல்ட், தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சொற்பமான இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணி ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே இழந்தாலும் நிதானமாக விளையாடி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. கான்வே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்ஸன் 18 ரன்களுடனும் மிட்செல் 19 ரன்களுடனுன்ம் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இவர் முதல் ஆள் இல்ல!
டி20 கிரிக்கெட்டில் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் பெர்குசன் முதல் ஆள் அல்ல. ஏற்கனவே, கனடாவின் வேகப்பந்துவீச்சாளரான சாத் பின் ஜஃபார், கடந்த 2021-ல் நடைபெற்ற பனாமாவுக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.
இதையும் படிங்க: முதல்முறையாக தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தி போட்டி… வயநாடு காப்பாற்றப்படுமா?