Connect with us

Cricket

ஆஸி.க்கெதிராக முதல் வெற்றி…. ஆப்கானிஸ்தானின் உலகக் கோப்பை ரிவெஞ்ச்

Published

on

டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.

செயிண்ட் வின்சென்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களான குர்பாஸ் – ஜர்தான் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் அடித்த நிலையில் குர்பாஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தானால், 148 ரன்களே எடுக்க முடிந்தது. குறிப்பாக, ஏற்கனவே வங்கதேச மேட்சில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி கொடுத்தது. மேக்ஸ்வெல் – ஸ்டாய்னிஸ் ஜோடி சிறிதுநேரம் நிலைத்து நின்றாலும் அது ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தவில்லை. தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஸ்டாய்னிஸ் மற்றும் டிம் டேவிட் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குல்பாதின் நயீப், மேக்ஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பலித்த மேக்ஸ்வெல்லின் அதிரடி இந்த மேட்சில் பலிக்கவில்லை.

19.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 127 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆப்கானிஸ்தானின் குல்பாதின் நயீப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

google news