Cricket
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை: ஐசிசி-க்கு NO சொன்ன பிசிசிஐ
அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா நடத்தாத பட்சத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் நடத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தாது என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த தொடரை நடத்தப்போவது யார் என்பது பற்றிய இறுதி முடிவை ஐசிசி வருகிற 20 ஆம் தேதிக்குள் எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.
“அவர்கள் (ஐசிசி) எங்களிடம் உலகக் கோப்பை தொடரை நடத்த முடியுமா என்று கேட்டனர். நான் முடியாது என்று கூறி விட்டேன். நாங்கள் மழைக்காலத்தில் இருக்கிறோம், அடுத்த ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வேண்டுமானால் நடத்துகிறோம் என்று பிசிசிஐ செயலாளர் ஐசிசியிடம் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.”
இந்த ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை வங்காளதேசம் நடத்த இருந்தது. எனினும், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், வன்முறை, உயிரிழப்புகள், அசாதாரண சூழல் காரணமாக பாதுகாப்பு விஷயத்தில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதனால், இந்த தொடரை வங்காளதேசம் தவிர்த்து மற்ற நாடுகளில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்துமாறு ஐசிசி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.