Cricket
வேணும்னு பண்ணலங்க.. எப்பவும் தல டோனி தான் கேப்டன்.. தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் முன்னாள் வீரர் திநேஷ் கார்த்திக். இந்திய அணியில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் – பேட்டர்களில் ஒருவாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக், டி20 போட்டிகளில் ஃபினிஷர் ரோலில் சிறந்து விளங்கினார். எனினும், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி வரும் தினேஷ் கார்த்திக், தனது ஆல்டைம் பிளேயிங் 11 வீரர்கள் அடங்கிய அணியை கடந்த வாரம் அறிவித்தார். இதில் தினேஷ் கார்த்திக் எம்எஸ் டோனி பெயரை சேர்க்காதது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தினேஷ் கார்த்திக் வீடியோவை பார்த்த பலரும், இந்த பட்டியலில் எம்எஸ் டோனி பெயரே இடம்பெறவில்லை என கடுமையாக சாடினர்.
இந்த நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து தினேஷ் கார்த்திக் தனது ஆல்டைம் பிளேய.ிங் 11 அணியில் எம்எஸ் டோனி இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “பட்டியலில் எம்எஸ் டோனி பெயர் இடம்பெறாதது உண்மையில், தவறுதலாக அரங்கேறிய விஷயம் தான். இதில் என்பக்கம் தான் உண்மையான தவறு உள்ளது,” என்று தெரிவித்தார்.
“எந்த எபிசோட் வெளியான பிறகு தான் நான் அதை உணர்ந்தேன். நான் அந்த 11 வீரர்கள் பட்டியலை தேர்வு செய்யும் போது என் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டு இருந்தன, அதில் நான் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும் என்பதையே மறந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக அதில் ராகுல் டிராவிட் இருக்கிறார், எல்லோரும் நான் பார்ட்-டைம் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ததாக நினைத்தனர்.”
“உண்மையில் நான் ராகுல் டிராவிட்-ஐ விக்கெட் கீப்பராக தேர்வு செய்யவில்லை. ஒரு விக்கெட் கீப்பராக இருந்துகொண்டு, விக்கெட் கீப்பர் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நான் மறந்தேன் என்று உங்களால் நம்ப முடிகிறதா? அது மிகப்பெரிய பிழை. என்னை பொருத்தவரை இந்த விஷயம் மிகவும் தெளிவான ஒன்று.”
“இந்தியா மட்டுமில்லை, எந்த விதமான கிரிக்கெட் என்றாலும், இந்த போட்டியை விளையாடியவர்களில் தலைசிறந்த வீரர் தல டோனி மட்டும் தான். அணியில் மாற்றம் செய்ய வேண்டும் எனில், தல டோனி அதில் ஏழாவது வீரராக இருப்பார். மேலும் அந்த அணிக்கு அவர்தான் கேப்டனாக இருப்பார்,” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.