Cricket
இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர்.. முன்னாள் பாக். கோச் வேண்டும்.. கவுதம் காம்பீர்
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை நியமிக்கலாம் என்று கவுதம் காம்பீர் பிசிசிஐ-இடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வினய் குமார், ஜாகீர் கான் உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது வினய் குமாரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ தயக்கம் காட்டுவதாகவும், ஜாகீர் கானிடம் இது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வரிசையில், தற்போது மோர்னே மோர்கல் பெயரை கவுதம் காம்பீர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் மோர்னே மோர்கல்-இடம் பிசிசிஐ இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டுவதற்கு மேலும் சில காலம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த விவகாரத்தில் அதிக நேரம் எடுக்கும் படச்த்தில் இம்மாத இறுதியில் இலங்கையில் நடைபெறும் தொடரில் கவுதம் காம்பீருடன் விவிஎஸ் லக்ஷமன் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகாடமியின் உதவியாளர் குழு இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஜூலை 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது.