Cricket
பயிற்சியாளராக கவுதம் காம்பீர் சம்பளம் எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை நேற்றிரவு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் காம்பீர் தான் என்று கூறும் தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்தன. அவற்றை உண்மையாக்கும் வகையில், பிசிசிஐ அறிவிப்பு அமைந்தது.
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். இம்மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் இருந்தே கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், அவரது சம்பளம் பற்றிய இறுதி முடிவை பிசிசிஐ இன்னும் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுதம் காம்பீருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் எவ்வளவு என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கவுதம் காம்பீர் உதவியாளர் குழுவை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
முதற்கட்டமாக பணியை துவங்கிக் கொள்ளலாம், சம்பள விஷயங்கள் எங்கும் சென்றுவிடாது என்ற எண்ணத்தில் கவுதம் காம்பீர் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்ட போதும், அவர் சம்பள விஷயங்களை பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று கூறி பணியில் கவனம் செலுத்தினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணியில் இணையும் போது அவர் அதுதொடர்பாக ஒப்பந்தத்தில் கூட கையெழுத்திடவில்லை என்று தெரிகிறது. இதே போன்று கவுதம் காம்பீர் ஊதிய விவரங்கள் பொறுமையாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இவரது சம்பளம் ராகுல் டிராவிட்-க்கு வழங்கப்பட்டதை போன்றே இருக்கலாம் என்று தெரிகிறது.