Cricket
இந்திய பயிற்சியாளர் குழுவில் அவர் வேண்டும்.. கவுதம் காம்பீர்
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.
இவரது நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளியாகி இருந்தன. அவற்றை உண்மையாக்கும் வகையில் பிசிசிஐ கவுதம் காம்பீரை இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக அறிவித்தது.
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை துவங்க உள்ளார். இந்த நிலையில், தனது குழுவில் இடம்பெற வேண்டிய பயிற்சியாளர் மற்றும் அணி உதவியாளர் குழுவை தேர்வு செய்யும் பணிகளில் கவுதம் காம்பீர் மும்முரமக ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் தன்னுடன் கேகேஆர் அணியில் பணியாற்றிய ரியான் டென் டோஷெட் இடம்பெற வேண்டும் என்று கவுதம் காம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ரியான் பணியாற்றி உள்ளார்.
இதுதவிர ரியான் உலகம் முழுக்க நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பல்வேறு ஏராளமான அணிகளில் ஏராளமான பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக கரீபியன் பிரீமியர் லீக், மேஜர் கிரிக்கெட் லீக் மற்றும் ஐஎல்டி20 உள்ளிட்டவைகளில் ரியான் தொடர்ச்சியாக பணியாற்றி வந்துள்ளார்.
44 வயதான ரியான் தனது குழுவில் முதன்மையாக நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய இறுதி முடிவை பிசிசிஐ தான் எடுக்க வேண்டும்.
முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான அபிஷேக் நாயர் கவுதம் காம்பீர் குழுவில் துணை பயிற்சியாளராக இணைய இருப்பதாக கூறப்பட்டது.