Cricket
ஜெய் ஷாவை தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் யார்? வெளியான முக்கிய தகவல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தலைவராக தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு கிரெக் பார்க்லேவை விட அதிக வாய்ப்புகள் கொண்டவராக ஜெய் ஷா விளங்குவதாக கூறப்படுகிறது. ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே துவங்கிவிட்டன.
இதை உறுதிப்படுத்துவதற்கு ஐசிசி விதிகளின் படி ஒருவர் முன்மொழிவதும் மற்றொருவர் அதை வழிமொழிவதும் அவசியம் ஆகும். இந்த விஷயத்தில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்படுவதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆதரவு வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கும் பட்சத்தில் பிசிசிஐ-இன் அடுத்த செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் ரோகன் ஜெட்லி பிசிசிஐ-இன் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ரோகன் ஜெட்லியுடன் மேலும் சிலர் போட்டியிடுவதாகவும், ஆனால் இவர்தான் அந்த போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி விதிகளின் படி தற்போதுள்ள 16 ஐசிசி இயக்குநர்களும் தங்களது வேட்பு மனுக்களை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதில் மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் அந்த பதவியை தொடர்வதற்கு கிரெக் பார்க்லேவுக்கு தகுதி உண்டு. ஆனால் அவர், மீண்டும் தலைவராக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
ஒருவேளை தற்போதைய தகவல்கள் உண்மையாகும் வகையில், ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இளம் வயதில் ஐசிசி தலைவர் ஆனவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெறுவார். அவருக்கு தற்போது 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன் மற்றும் சஷான்க் மனோகர் ஆகியோர் வரிசையில், ஐசிசி தலைவர் ஆன இந்தியர் என்ற பெருமையையும் ஜெய் ஷா பெறுவார்.