Cricket
கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. ரபாடா அபார சாதனை!
தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா. இவர் தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணிக்கு வியன் முல்டர் மற்றும் ககிசோ ரபாடா ஜோடி முதற்கட்ட ஓவர்களை வீசினர். முதலில் முல்டர் தன் பங்கிற்கு ஸ்விங் மற்றும் பவுன்சர்களால் வங்கதேச வீரர்களை அச்சுறுத்தினார். அடுத்து வந்த ககிசோ ரபாடா பிட்ச்-க்கு ஏற்றவாரு பந்துவீசியதில் வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இந்த இரு விக்கெட்டுகளை சேர்த்து ககிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டினார். மேலும், 11,817 டெலிவரிக்களில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். முன்னதாக வக்கர் யூனஸ் 12,602 பந்துகளிலும், டேல் ஸ்டெயின் 12,605 பந்துகளிலும், ஆலன் டொனால்டு 13,672 பந்துகளிலும் மால்கம் மார்ஷல் 13,728 பந்துகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதன் காரணமாக 12,000-க்கும் குறைந்த பந்துகளை வீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆகியிருக்கிறார் ககிசோ ரபாடா. பாகிஸ்தானை சேர்ந்த யூனிஸ் அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்தார். தற்போது ரபாடா 785 பந்துகள் குறைவாக வீசி, அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.