Cricket
ஓரளவுக்கு கட்டுப்படுத்துவேன், அதுமீறினால் நான் அப்படித்தான் – முகமது ஷமி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர் முகமது ஷமி. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் இறுதிப் போட்டி தவிர அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி அசத்திய முகமது ஷமி, காயம் காரணமாக விளையாடமால் உள்ளார்.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி, நெட்ஸில் பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில், முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்த பேட்டியில் பல விஷயங்களுக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி 2022 ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து பேசும் போது, “பொதுவாக அதுபோன்ற விஷயங்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால், நிலைமை கைமீறி செல்லும் போது நான் பேசுவேன். எங்கள் இருவர் இடையிலும் நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் நண்பர்கள் தான். அதை அவர் அந்த தருணத்தில் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம்.”
“அவர் என்னிடம் கூறும்போது, உண்மையில் நான் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியாது என்றார். நான் அவரிடம் கோடிக்கணக்கானோர் நம்மை திரையில் பார்க்கின்றனர். நாம் நமது எமோஷன்களை கட்டுப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.
முன்னதாக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது அதிர்ச்சி அளிப்பதாக முகமது ஷமி தெரிவித்து இருந்தார். மேலும், இருவரின் இடத்தை அணியில் நிரப்புவது மிகவும் கடினமான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
Photo Courtesy: Insta | theshubhankarmishra