Cricket
2019 உலகக் கோப்பை: மனம் திறந்த எம்.எஸ். டோனி, என்ன சொன்னார் தெரியுமா?
2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக எம்.எஸ். டோனி ரசிகர்கள் இந்த போட்டியை எப்பதும் மறக்கவே மாட்டார்கள்.
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து, இக்கட்டான சூழலில் எம்.எஸ். டோனி ரன் அவுட் ஆகி வெளியேறியது இன்றும் பலருக்கும் மன கசப்பை கொடுக்கும். இந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். டோனி, அந்த இன்னிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில், என்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடர் என்று எனக்கு தெரியும் என்பதால், வெற்றியுடன் முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்காதது மனதை உடைத்துவிட்டது. அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகர முயற்சித்தோம். இதற்கு நேரம் எடுக்கும்.
உலகக் கோப்பைக்கு பிறகு எல்லோருக்கும் சற்று நேரம் கிடைக்கும். நான் அந்த தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை, இதனால் எனக்கு அதிக நேரம் கிடைத்தது. உண்மையில் அது மனதை உடைத்த தருணங்கள் தான். ஆனால் அதேநேரம் அதில் இருந்து மீண்டு வர வேண்டும். முழு முயற்சியை கொடுத்தீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் நம்ப வேண்டும், என்றார்.