Cricket
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – பாக். வங்காளதேச தொடரில் புது டுவிஸ்ட், ஏன் தெரியுமா?
கொரோனா காலக்கட்டம் போன்றே ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டியை நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அந்த வகையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக மைதானத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதே, ரசிகர்கள் அனுமதிக்கப்படாததற்கு காரணம் ஆகும்.
“எஞ்சியுள்ள வழிமுறைகள் என்னென்ன என்பதை கவனமாக ஆய்வு செய்து, நாங்கள் எடுக்கக்கூடிய மிக பாதுகாப்பா முடிவு, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்பதாகவே இருக்க முடியும். இந்த போட்டியை காண ஏற்கனவே டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்பட்டு விடும். டிக்கெட் வாங்கிய போது அளித்த வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு அவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.”
“இதன் மூலம் ஏற்படக்கூடிய இன்னல்களுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும். இந்த பணிகள் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது.