Cricket
59 ஆண்டுகளில் மிகவும் மோசம்.. பாதாளத்தில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி கடந்த ஆறு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது.
இந்த மோசமான தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. கடந்த 1965 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு பட்டியலில் பின்தங்கியுள்ளது. கிட்டத்தட்ட 59 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் இத்தனை பெரிய சரிவை சந்தித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதே பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு எட்டாவது இடத்திலும், வங்கதேசம் அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியை தொடர்ந்து டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி தற்போது பதினொராவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதே போன்று விக்கெட் கீப்பர், பேட்டர் முகமது ரிஸ்வான் மட்டுமே டாப் 10 பேட்டர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பாபர் அசாம் மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டு 12 ஆவது இடத்தில் உள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தே பாபர் அசாம் வெறும் 64 ரன்களையே சேர்த்திருந்தார்.