Cricket
விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி இதுவரை தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. எனினும், விராட் கோலி வெறும் 75 ரன்களையே அடித்துள்ளார். நேற்றைய அரையிறுதி போட்டியில் விராட் கோலி 9 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அரையிறுதி போட்டியில் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய விராட் கோலி வருத்தத்துடன் டக் அவுட் நோக்கி நடையை கட்டினார்.
டக் அவுட்டில் முகம் முழுக்க சோகம் நிரம்பிய கோலியை பார்க்க நேரிட்டது. அப்போது அவரை நோக்கி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை தட்டிக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
வீடியோவில் கமென்ட் செய்வோர், விராட் கோலிக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் விராட் கோலி மூன்றாவது வீரராக களமிறங்குவது தான் சரியான ஒன்று என தெரிவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்-ஐ வென்றார். எனினும், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகினார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 37 ரன்களை அடித்ததே அவரின் சிறப்பான ரன்களாக இருக்கிறது.