Cricket
ஐபிஎல் அணியின் ஆலோசகர் ஆகும் ராகுல் டிராவிட்?
இந்திய அணியின் முன்னாள் வீரர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக கவுதம் கம்பீர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றினார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக அவர் ஆலோசகர் பணியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது. இப்படி நடக்கும் பட்சத்தில் 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2025 ஐபிஎல் தொடரில் பேரிழப்பாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஏராளமான ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ராகுல் டிராவிட்-ஐ தொடர்பு கொண்டு 2025 ஐபிஎல் தொடரில் தங்களது அணிக்காக பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பணியில் இணைய அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பிலும் ராகுல் டிராவிட்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் அடுத்த வாரம் முதல் எனக்கு எந்த வேலையும் இல்லை. ஏதேனும் வேலை இருந்தால் கூறுங்கள் என்று விளையாட்டாக கூறி இருந்தார்.
கிரிக்கெட்டில் அதிக அனுபவம் மிக்கவர், அதிக திறமைசாலியான ராகுல் டிராவிட் தங்கள் அணியில் இருந்தால் கோப்பையை நிச்சயம் வெல்ல முடியும் என்று ஐபிஎல் நிறுவனங்கள் அவருக்கு அழைப்பு விடுப்பதாக தெரிகிறது.