Cricket
டி20 உலகக்கோப்பை வெற்றியை ஓரமா வச்சிட்டு, அடுத்த வேலையை பாக்கனும்.. ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் இணைந்து, எதிர்கால போட்டித் தொடர்களுக்கு ஆயத்தமாகி வருகிறது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்நோக்கி உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன் பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா, கிரிக்கெட்டை தவிர்த்த சில காலம் அருமையாக இருந்தது. உலகக் கோப்பை வென்று தாயகம் திரும்பியது தலைசிறந்த அனுபவங்களை கொடுத்தது. டெல்லி மற்றும் மும்பையில் நாங்கள் அனுபவித்தது மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், அதில் இருந்து வெளியே வரவேண்டும், கிரிக்கெட் நகர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் செய்த அனைத்தும் அந்த நேரத்தில் நன்மைக்கான ஒன்றுதான். ஆனால் காலம் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப நாமும் முன்னோக்கி நகர வேண்டும். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இதுதான் நடந்தது. அதிகளவு ஏமாற்றம் இருந்தது, ஆனாலும் நாங்கள் அதை கடந்து வந்து இந்த உலகக் கோப்பை மீது கவனம் செலுத்தினோம்.
தற்போது டி20 உலகக் கோப்பை முடிந்துவிட்டது. தற்போது ஒரு அணியாக அடுத்த என்ன என்பதை தான் பார்க்க வேண்டும். இந்த வகையில், பல பெரிய தொடர்கள் துவங்க உள்ளன. அவற்றை எதிர்நோக்கி இருக்கிறோம், என்று தெரிவித்தார்.