இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதலவது டி20 போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ஷபாலி வெர்மா மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். ஷபாலி வெர்மா 20 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய ஹர்லீன் தியோல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்து ஆடிய கேப்டன் மந்தனா 62 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்களை விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
இது சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனாவின் முதல் சதமாக அமைந்தது. மகளிர் கிரிக்கெட்டின் மூன்று வகை போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் இந்திய வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் மாறியது. முன்னதாக ஹர்மன்பிரீத் கௌர் 103 ரன்களை அடித்ததே மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஹர்மன்பிரீத் கௌருக்கு பதிலாக இந்திய அணியை வழிநடத்திய ஸ்மிருதி மந்தனா ருத்ர தாண்டம் ஆடினார்.
ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோலின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. பிறகு 211 எனும் இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி வெறும் 113 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி சார்பில் கேப்டன் ஸ்கிவர்-ப்ரன்ட் மட்டும் சிறப்பாக ஆடி 66 ரன்களை சேர்த்தார்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சரானி 3.5 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் தவிர தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் அமஞ்சோத் கௌர் மற்றும் அருந்ததி ரெட்டி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.