ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை தன்வசப்படுத்தியது.
தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதற்கு உலகம் முழுவதிலும் இருந்து அந்த அணியினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. தமிழ் நாட்டில் நெட்டிசன்கள் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எண்ணற்ற ரீல்ஸ் வீடியோக்களை எடிட் செய்து பதிவிட்டனர். மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் அதன் கேப்டன் டெம்பா பவுமாவை சிறப்பிக்கும் வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில், கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி தங்களது சொந்த ஊருக்கு செல்லும் முன்பு கோப்பையை வென்ற லார்ட்ஸ் மைதானத்திற்கு மீண்டும் சென்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான தகவலை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் உதவியாளர் குழு என அனைவரும் லார்ட்ஸ் மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
இது குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க வீரர் வியன் மல்டர், “கடந்த சில நாட்கள் மிக மிக நன்றாக இருந்துள்ளது. இத்தகைய கொண்டாட்டங்களை இதற்கு முன் நான் கண்டதில்லை, ஒரு அணியாக இந்த அனுபவம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதனை கிரிக்கெட்டின் இல்லத்திலேயே கொண்டாடுவது மேலும் மகிழ்ச்சியை தருகிறது,” என தெரிவித்தார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மல்டர், “நான் ஹெட்-இடம் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் வெற்றி பெறாததை நினைத்து அவர் உண்மையில் உடைந்து போனார். ஆனால், ஒட்டுமொத்தத்தில் போட்டியின் மீதுள்ள மதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆஸ்திரேலியாவை பற்றி நினைக்கும் போது, அவர்கள் சமயங்களில் விரும்பத்தகாத வகையில் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் உண்மையில் சாம்பியன்கள் தான்,” என்று கூறினார்.