Cricket
இந்தியாவில் சொந்த வியாபாரம்.. ரூ. 1400 கோடி முதலீடு செய்யும் முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவில் உணவுத்துறை வியாபாரத்தில் கால்பதிக்கிறார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரா மாவட்டத்தில் சொந்தமாக குளிர்பான உற்பத்தி ஆலையை உருவாக்க இருக்கிறார்.
இவரின் புதிய வியாபாரம், “முத்தையா பிவெரேஜஸ் அண்ட் கன்ஃபெக்ஷனரிஸ்” என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. புதிய வியாபாரம் தொடர்பாக முத்தையா முரளிதரன் அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல்-ஐ நேரில் சந்தித்தார். இந்த வியாபாரம் மூலம் உள்ளூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்கட்டமைப்புகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு ரூ. 230 கோடியில் துவங்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது இந்த வியாபாரத்தில் ரூ. 1400 கோடிகள் முதலீடு செய்யப்படுகின்றன. இதற்காக முதற்கட்டத்திலேயே ரூ. 1000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதில் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் உற்பத்தி ஆலை கட்டமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.
புதிய நிறுவனம் தொடர்பாக நிலவி வந்த சிறு நிலப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலத்தில் பணிகளை துவங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார். மேலும், முத்தையா முரளிதரனின் எதிர்கால திட்டம் குறித்தும் அமைச்சர் விரிவாக பேசினார். அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் இதேபோன்று மற்றொரு உற்பத்தி ஆலையை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
குளிர்பான துறையில் களமிறங்குவதன் மூலம், முத்தையா முரளிதரன் கிரிக்கெட் மட்டுமின்றி வியாபார துறையிலும் அதிக கவனம் கொண்டவராக பார்க்கப்படுகிறார். மாநில அரசின் ஒத்துழைப்பு, திட்டங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைக்கு ஏற்ற இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி என்ற அடிப்படையில், முத்தையா முரளிதரன் தனது வியாபாரத்திற்கு கர்நாடக மாநிலத்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதவிர முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது ஆலோசனையின் கீழ் சன்ரைசர்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.