Cricket
மேட்ச் பிக்சிங்: சிக்கலில் இலங்கை வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம-வுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக பிரவீன் ஜெயவிக்ரம மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
25 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரம தன்னை மேட்ச் பிக்சிங் செய்ய மர்ம நபர்கள் அனுகியதை ஐசிசி-யிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த 2021 இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இது தொடர்பான தகவல்களை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் மேட்ச் பிக்சிங் செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை அழித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி பதில் அளிக்க ஐசிசி பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
இவர் மீது ஐசிசி சட்ட விதி 2.4.4, பிரிவு 2.4.7 உள்பட பல விதிமீறல்களுக்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், மேட்ச் பிக்சிங் பற்றிய தகவலை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தாமதம் இன்றி தெரிவிக்க மறுத்தது, மற்றொரு வீரரையும் மேட்ச் பிக்சிங் செய்ய தனது கோரிக்கை விடுக்கப்பட்டது பற்றி ஊழல் தடுப்பு பிரிவுக்கு விரைந்து தகவல் தெரிவிக்காதது போன்ற செயல்களில் ஜெயவிக்ரம ஈடுபட்டுள்ளார்.
இதுதவிர தனக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை அழித்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி ஒப்புக் கொண்டுள்ளன.