Cricket
கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்..!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். நேற்று (ஜூலை 27) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வென்று, வெற்றியுடன் கணக்கை துவங்கினார். இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி நேற்றும், இரண்டாவது போட்டி இன்றும் நடைபெற உள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் தங்களது பயணத்தை தொடங்கினர். இந்த போட்டியில் இந்திய அணி 43 ரன்களில் வெற்றி வாகை சூடியது. இதே போட்டியில் வைத்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்து அசத்தினார்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி அருமையான துவக்கம் கொடுத்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். இதன் மூலம் போட்டி முடிவில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலியை சமன் செய்துள்ளார். இதுவரை 69 போட்டிகளில் களம்கண்ட சூர்யகுமார் யாதவ் 16 முறை ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார். விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
அந்த வகையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.