Connect with us

Cricket

போட்டி நிறுத்தப்பட்டதும் கனடா அணி டிரெசிங் ரூம் விரைந்த டிராவிட் – ஏன் தெரியுமா?

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற வேண்டிய போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்தன. எனினும், மழை காரணமாக போட்டி துவங்கப்படாமலேயே, ரத்து செய்யப்பட்டு விட்டது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய போட்டி ரத்தானதும், இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை தொடர் கனடா அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு முடியவில்லை. அந்த அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நேற்றைய போட்டி கனடாவுக்கு சம்பிரதாய அடிப்படையிலேயே நடைபெற இருந்தது. எனினும், இந்த போட்டிக்கு வானிலையின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

நேற்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கனடா அணியின் டிரெசிங் ரூமிற்கு விசிட் அடித்தார். டிரெசிங் ரூம் வந்த ராகுல் டிராவிட்-க்கு கனடா அணியிர் கையொப்பமிட்ட, அவர்கள் நாட்டின் ஜெர்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் கனடா வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் நன்றி. இந்த தொடரில் இதுவரை நீங்கள் அபரிமிதமான பங்களிப்பை வழங்கியதற்காக பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சிக்கல்களை நாங்கள் அனைவரும் நினைத்து பார்க்கிறோம். இது அத்தனை எளிதான காரியம் இல்லை.”

“2003 ஆம் ஆண்டு நான் ஸ்காட்லாந்தில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறேன். இணை நாடு என்ற வகையில், உங்களது போராட்டம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், உண்மையில் நீங்கள் அனைவரும் எங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கின்றீர்கள்.”

“இந்த தொடரில் விளையாட நீங்கள் செய்யும் தியாகங்களை பார்க்கும் போது, நீங்கள் இதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நாட்டின் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றீர்கள் என்பதை நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல விஷயம்,” என்று தெரிவித்தார்.

google news