ரொம்ப இழிவா பேசினாங்க… ஆஸி.க்கள் செயலுக்கு ஆதங்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா

ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லும் நீண்ட கால கனவை தென் ஆப்பிரிக்கா அணி சில தினங்களுக்கு முன்பு தான் நிறைவேற்றிக் கொண்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்று அசத்தியது. முதல் முறையாக ஐசிசி கோப்பை வென்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி 282 எனும் வெற்றி இலக்கை துரத்தி வெற்றி வாகை சூடியது. இந்த ரன் சேஸில் ஏய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவதற்கு தென் ஆப்பிரிக்கா அணி கிரிக்கெட் ரீதியிலும், மனரீதியிலும் அதிக உறுதியுடன் செயல்பட்டுள்ளது. போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா வீரர்களை மனதளவில் காயப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தது, போட்டிக்கு பிறகு தற்போது தெரியவந்துள்ளது. இதனை கோப்பையை வென்ற டெம்பா பவுமா பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பேசியதை நாங்கள் கேட்டோம். அதீத நம்பிக்கை மற்றும் ஏராளமான சந்தேகம் கொண்டவர்களுக்கு மத்தியில் தான் நாங்கள் வந்தோம். நாங்கள் கடந்து வந்த பயணம் முழுவதிலும் சந்தேக எண்ணம் கொண்டவர்களை கடந்திருக்கிறோம். நாங்கள் எங்களை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றிக் கொண்டோம். இந்த வெற்றி அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி விட்டது. ஒரு தேசமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைய இது ஒரு வாய்ப்பாக மாறியிருக்கிறது.”

“ஒரு நாடாக ஒரு விஷயத்திற்கு கொண்டாடுவதற்கு இது ஒரு வாய்ப்பு. நம் பிரச்சினைகளை மறந்து ஒன்றிணைவதற்கான நேரம் இது. இது நம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வீரர்கள், ஏராளமான சந்தேகிப்பவர்களை கடந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் விளையாடிய விதம் அனைத்தையும் அழித்துவிட்டது,” என டெம்பா பவுமா பேசியுள்ளார்.

Leave a Comment