Cricket
விராட் கோலி பாகிஸ்தான் வந்தால்.. ஷாஹித் அப்ரிடி சொல்வது என்ன?
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. 1998 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மினி உலகக் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. முதல்முறையாக இந்த தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடும் வாய்ப்புகள் குறைவு தான் என்றே தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும் என்று பிசிசிஐ-இடம் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு செய்யும் போது இருநாட்டு கிரிக்கெட் உறவு மேம்படுவதோடு, தன் நாட்டு ரசிகர்களும் விராட் கோலி விளையாடுவதை கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஷாஹித் அப்ரிடி, “நான் இந்திய அணியை வரவேற்பேன். நாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதும், இந்தியாவில் எங்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. இந்திய அணியிர் 2005-06 ஆண்டு காலக்கட்டத்தில் பாகிஸ்தான் வந்த போதும் மகிழ்ச்சி அடைந்தனர்.”
“இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒவ்வொருத்தர் நாடுகளுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை தாண்டி வேறு எதுவும் நிம்மதியை கொடுக்காது. விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் அன்பு மற்றும் மரியாதையை மறந்துவிடுவார். அவருக்கென தனி கிளாஸ் உள்ளது,” என்று தெரிவித்தார்.