Cricket
தொடரும் வன்முறை, மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு சிக்கல்
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வங்காளதேசத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக அணிகள் ஒருபக்கமும், தொடரை நடத்த கிரிக்கெட் வாரியங்கள் ஒருபக்கமும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், யாரும் எதிர்பாரா வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, வங்காளதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்நாட்டில் இருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்தும் அந்நாட்டில் அமைதி திரும்பவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல், தீ வைப்பு என பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில், கலவரம் காரணமாக வங்காளதேசத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தலாமா என்பதை ஐசிசி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வங்காளதேசத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள், அந்நாட்டு கள சூழலை உற்று நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வங்காளதேசம் நடத்தும் வாய்ப்புகள் குறைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வங்காளதேசத்தை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடத்த வேறு இடத்தை தேர்வு செய்யும் போது, இதனை நடத்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்களின் படி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை வங்காளதேசம் தவிர்த்து, இந்தியாவில் நடத்த ஐசிசி பரிந்துரைக்கலாம் என்று தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.