WTC Final.. ஆஸி. பவுலர்களை புரட்டி எடுத்த ஏய்டன் மார்க்ரம்… முதல் தென்ஆப்பிரிக்க வீரராக புதிய சாதனை

ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் 282 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஏய்டன் மார்க்ரம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகில் புகழ் பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்த ஏய்டன் மார்க்ரம் 159 பந்துகளில் 102 ரன்களை அடித்துள்ளார்.

ஏய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா தன் பங்கிற்கு விக்கெட் வீழாமல் பார்த்துக் கொண்டார். பவுமா மற்றும் மார்க்ரம் பொறுப்பான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் தருவாயில் உள்ளது. இந்த கோப்பையை வெல்லும் பட்சத்தில் இது தென் ஆப்பிரிக்கா அணி வெல்லும் முதல் ஐசிசி கோப்பையாக இருக்கும்.

இத்தனை பெருமைக்குரிய போட்டியில் ஏய்டன் மார்க்ரம் சதம் அடித்து இருப்பதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் தென் ஆப்பிரிக்கா அணி வீரராக ஏய்டன் மார்க்ரம் சாதனை புரிந்தார். இந்த சதத்தை சேர்க்கும் பட்சத்தில் இது ஏய்டன் மார்க்ரம் டெஸ்ட் போட்டிகளில் அடித்த 8வது சதம் ஆகும்.

இதுதவிர லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் சதம் விளாசிய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஜோர்டன் கிரீனிட்ஜ், ராய் பிரெட்ரிக்ஸ், மைக்கல் கிளார்க், அஜித் அகார்கர், டான் பிராட்மேன் ஆகியோருடன் தற்போது ஏய்டன் மார்க்ரம் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட் மற்றும் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஏய்டன் மார்க்ரம் தற்போது புரூஸ் மிட்செல், கிரீம் பொல்லாக், ஜாக்ஸ் காலிஸ் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

Leave a Comment