Cricket
யுவாராஜ் சிங் ஆல்-டைம் XI – டோனிக்கு இடமில்லை
சர்வதேச சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா சாம்பியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங் தனது ஆல்-டைம் XI அணியை அறிவித்தார். இவரது இந்த அணியில் கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் துவக்க வீரர்களாகவும், மூன்று மற்றும் நான்காவது வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்தாவது வீரராக ஏபி டி வில்லியர்ஸ், ஆறாவது வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளனர். ஏழாவது வீரராக ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, எட்டாவது வீரராக முத்தையா முரளிதரன், வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் கிளென் மெக்ராத் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் ஒன்பது மற்றும் பத்தாவது வீரர்களாக உள்ளனர்.
பதினொராவது வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், பன்னிரெண்டாவது இடத்தில் தன்னை யுவராஜ் சிங் அறிவித்துக் கொண்டார். அந்த வகையில், தனது ஆல்-டைம் XI அணியில் யுவராஜ் சிங் எம்எஸ் டோனிக்கு இடம்கொடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிப் போட்டியை பொருத்தவரை டாஸ் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 156 ரன்களை சேர்த்தது. இதில் ஷோயப் மாலிக் 36 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இந்தியா சார்பில் அனுரீத் சிங் மூன்று விக்கெட்டுகளையும், வினய் குமார், பவன் நேகி மற்றும் இர்பான் பதான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
157 ரன்களை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா (10) சுமாரான துவக்கத்தையே கொடுத்தார். இவருடன் களமிறங்கிய அம்பதி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு ராயுடு மற்றும் குர்கீரத் சிங் மான் ஜோடி மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபட்டது.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய யூசப் பதான் 16 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இறுதியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.