Finance
ஜிஎஸ்டி ரிட்டன்ஸ்-இல் ஜூலை முதல் புதிய மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய மாற்றம் வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிமுறைகளின் கீழ் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் மூன்று ஆண்டுகளுக்கும் பழைய கணக்கை ஜூலை 1-ம் தேதி முதல் தாக்கல் செய்ய முடியாது. இது தொடர்பான அறிவிப்பை சரக்கு மற்றும் சேவை வரி முனையம் வெளியிட்டுள்ளது.
நிதித்துறை சட்டம் 2023-இன் கீழ் புதிய விதிமுறை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி உள்ளிட்டவைகளை தாக்கல் செய்யும் போது மூன்று ஆண்டுகளுக்கும் பழைய கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது.
ஜூலையில் வரப்போகும் மாற்றம் என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி முனையம் (ஜிஎஸ்டிஎன்) வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்- ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி, ஜிஎஸ்டிஆர்-4, ஜிஎஸ்டிஆர்-5, ஜிஎஸ்டிஆர்-5ஏ, ஜிஎஸ்டிஆர்-6, ஜிஎஸ்டிஆர்-7, ஜிஎஸ்டிஆர்-8 மற்றும் ஜிஎஸ்டிஆர்-9 உள்ளிட்டவைகளை தாக்கல் செய்யும் போது, அசல் ரசீதின் தேதி மூன்று ஆண்டுகளுக்கும் பழையதாக இருக்கக்கூடாது. இதே போல் வரி செலுத்துவோர் 2022-ம் ஆண்டுக்கும் பழைய கணக்குகளுக்கு ஜிஎஸ்டி ரிட்டன்ஸ் பெற விண்ணப்பிக்க முடியாது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ரிட்டன்கள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். இந்த விதிமுறை ஜூலை 2025 வரி காலத்தில் ஜிஎஸ்டி முனையத்தில் அமலுக்கு வரும் என்று ஜிஎஸ்டி முனையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாற்றம் குறித்து வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டிஎன் கடந்த அக்டோபர் மாதத்திலேயே அறிவித்து இருந்தது.
ஆன்லைனில் ஐடிஆர் விண்ணப்பிப்பது எப்படி?
ஜிஎஸ்டி ரிட்டன்ஸ்-ஐ ஆன்லைனில் பதிவு செய்ய வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி வெரிபிகேஷன் நம்பர் வைத்திருத்தல் அவசியம் ஆகும். இத்துடன் அவர்களது அக்கவுண்ட்-ஐ ஜிஎஸ்டி முனையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
முதலில் ஜிஎஸ்டி முனையத்தில் உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி Services (சர்வீசஸ்) — Returns (ரிட்டன்ஸ்) — Returns Dashboard (ரிட்டன்ஸ் டேஷ்போர்டு) ஆகிய ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த வலைப்பக்கத்தில் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2ஏ, ஜிஎஸ்டிஆர்-2பி அல்லது ஜிஎஸ்டிஆர்-3பி என உங்களுக்கு தொடர்புடைய படிவங்கள் காணப்படும்.
இனி நீங்கள் தேர்வு செய்த படிவத்தில் “Prepare Online” ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான விவரங்களை அதில் பதிவிட வேண்டும். இறுதியில் Submit ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து Track Return Status ஆப்ஷன் சென்று பார்க்கும் போது உங்களது படிவம் சமர்பிக்கப்பட்டதை கூறும் வகையில் Submitted என காண்பிக்கப்படும். இனி, மீதமுள்ள கிரெடிட் மற்றும் ரொக்கம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள Payment Of Tax — Check Balance ஆகிய ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
