இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் வங்கித் துறை மிக ஆழமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சமீப காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கும் அளவுக்கு வங்கித் துறை வளர்ச்சி பெற்றிருக்கிறது. அடிப்படை தேவை முதல் அரசு சேவைகளில் பயன் பெறுவது வரை என எல்லாவற்றுக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பிஎம் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் நிதி என அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து விதமான நிதியும் கடந்த சில ஆண்டுகளாக நேரடியாகவே வங்கிக் கணக்குகளில் தான் செலுத்தப்பட்டு வருகின்றன.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வங்கிக் கணக்குகளை துவங்குவதோடு மட்டுமின்றி அதனை முறையாக பராமரிக்க வேண்டும். பொது மக்கள் வங்கிக் கணக்குகளை கையாளும் விதத்தை அடிப்படையாக கொண்டு ரிசர்வ் வங்கி சமீபத்தில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட கால அளவுக்குள் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள், உரிமை கோரப்படாத வைப்புத் தொகை உள்ளிட்டவை குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது வரை பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத தொகையில் உள்ள கடன் இருப்பு, வங்கிகளால் பராமரிக்கப்படும் DEA நிதிக்கு மாற்றப்பட வேண்டும். DEA நிதி என்பது வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கும் அவசியமான பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களின் படி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் செயல்படாத கணக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த கணக்குகளில் உள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பத்து ஆண்டுகள் செயல்படாமல் கணக்குகளில் இருக்கும் தொகை DEA நிதிக்கு மாற்றப்பட்டு அது உரிமை கோரப்படாத வைப்புத் தொகையாக கருதப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனினும், ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் செயல்படாமல் இருக்கும் கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத கணக்குகளை செயல்படுத்த அனைத்து கிளைகளிலும் KYC புதுப்பிப்பு வசதி செய்யும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. அடுத்து வீடியோ மூலம் வாடிக்கையாளர் அடையாள செயல்முறை KYC புதுப்பிக்கும் வசதி வழங்கப்படும்.
மூன்றாவதாக செயலற்று கிடக்கும் வங்கிக் கணக்குகளை செயல்படுத்த வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிருபர்களின் சேவைகளையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த மூன்று நடைமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில் செயலற்று கிடக்கும் வங்கிக் கணக்குகள் ஓரளவுக்கு புதுப்பிக்கப்படவும், மக்கள் அவற்றை பயன்படுத்த வைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
செயல்படாத வங்கிக் கணக்குகளை செயல்படுத்தும் வழிமுறைகள்:
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளை அல்லது அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுக வேண்டும். அங்கு செயல்படாமல் உள்ள கணக்கை செயல்படுத்துவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். மேலும், இத்துடன் தேவையாண ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு செய்த பிறகு வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிக் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும்.