Connect with us

india

20 ஆண்டுகள்; அரசியல் ஈடுபாடு – நீட் பேப்பர் லீக் மோசடியின் முக்கிய புள்ளி சஞ்சீவ் குமார் முக்யா யார் தெரியுமா?

Published

on

தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டது பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் முக்யா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

யார் இந்த சஞ்சீவ் குமார் முக்யா?

பீகார் மாநிலம் நாளந்தா பகுதியில் உள்ள புத்தாஹக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராம பஞ்சாயத்தின் தலைவராக சஞ்சீவ் குமார் முக்யாவின் மனைவி 2016 முதல் 2021 பதவி வகித்தவர். இதனாலேயே, அவரை கிராமத்தின் முக்கியப் புள்ளி என்கிற விதமாக முக்யா அடைமொழியோடு அழைத்திருக்கிறார்கள்.

நாளந்தாவின் நூர்சாராய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராக பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தவர். பீகார், ஜார்க்கண்ட், உ.பி மற்றும் ம.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் `சால்வர் கேங்’ எனப்படும் பேப்பர் லீக் மோசடி கும்பலின் முக்கியமான தலைவராகவும் செயல்பட்டு வந்தவர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில், தலைமறைவாகியிருக்கும் சஞ்சீவ் குமார், போலீஸ் கைதில் இருந்து தப்ப முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்திருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களில் சஞ்சீவ் குமாருக்குத் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1990கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்த ரஞ்சீத் டான் என்பவரிடம் வேலை பார்த்த இவர், பின்னர் தனியாக செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

பீகார் மற்றும் அண்டை மாநிலங்களில் இதுபோன்ற வினாத்தாள் வெளியான 4 மோசடி சம்பவங்களில் சஞ்சீவ் குமாரின் பெயர் அடிபடுகிறது. பீகாரில் மண்டல அளவிலான அலுவலர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் மற்றும் 2016-ல் உத்தராகண்ட் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி என இரண்டு முறை கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல், சஞ்சீவ் குமாரின் மகன் டாக்டர் ஷிவ், சமீபத்தில் நடந்த பீகார் ஆசிரியர் தேர்வு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த மோசடியில் சஞ்சீவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவர் கைது செய்யப்படவில்லை. நீட் தேர்வு நடைபெற்ற மே 5-ம் தேதி காலையில் விடைகளுடன் கூடிய நீட் தேர்வு வினாத்தாள் சஞ்சீவின் கையாளாக செயல்பட்ட பல்தேவ் குமாருக்கு வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் வடிவில் கிடைக்கப்பெற்றதாகவும், அதை மாணவர்கள் மனப்பாடம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சஞ்சீவ் குமாரின் மனைவி மமதா தேவி, பீகார் ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தவர். கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியில் இருந்து விலகி லோக் ஜனசக்தி கட்சியில் இணைந்த அவர், நாளந்தாவின் ஹர்னௌத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நீட் மோசடியில் சஞ்சீவ் குமார் முக்யா சிக்கினால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news