latest news
புதுச்சேரியைப் பதறவைத்த 6.2 டன் சந்தன மரங்கள்… சிக்கலில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக வனத்துறை மற்றும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் டு புதுச்சேரி – தமிழ்நாடு போலீஸின் ஸ்கெட்ச்
கேரளாவில் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்றை தமிழ்நாடு போலீஸார் சேலம் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரியில் கேரளாவில் இருந்து சந்தன மரங்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியின் ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தன மரக்கட்டைகளை புதுச்சேரி, வில்லியனூர் கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்துக்குக் கொண்டு செல்வதாக லாரியின் ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து புதுச்சேரி தனியார் நிறுவனம் குறித்து போலீஸார் விசாரித்த நிலையில், அது புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனம் என்று தெரியவந்தது.
மேலும், அந்த நிறுவனத்தை அமைச்சர் வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்துக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, வனத்துறையினரோடு புதுச்சேரி விரைந்தது தமிழ்நாடு போலீஸ் படை. குறிப்பிட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனையை தமிழ்நாடு வனத்துறை மற்றும் போலீஸார் நடத்தினர்.
இந்த சோதனையில், அந்த நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த நிறுவனத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்ததையும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இது புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!