latest news
மன்னிச்சிடுங்க.. ஒரு மாசத்துல திருப்பி தந்துடுறேன்… கொள்ளையடித்துவிட்டு திருடன் எழுதி வைத்த கடிதம்…!
தூத்துக்குடி மாவட்டம் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி விட்டு ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சித்திரை செல்வின் என்பவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சித்திரைச் செல்வன் தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வருகின்றார். இவர் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்று விட்டார்.
இவரின் வீட்டை அப்பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்திருக்கின்றார். செல்வி கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல் ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்வதற்காக வந்திருக்கின்றார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சித்திரைச் செல்வனுக்கு செல்வி தகவல் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வந்தார்கள். வீட்டுக்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, மற்றும் 60,000 ரொக்க பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சித்திரைச் செல்வன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் ‘என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால்தான் திருடி விட்டேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அந்த கைரேகையை பதிவு செய்தனர். மேலும் கொள்ளையடித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.