latest news
நடைபயிற்சிக்குப் போகவே பயமா இருக்கு… செல்லூர் ராஜூ விமர்சனம்
மதுரையில் நடைபயிற்சிக்குப் போகவே பயமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்த மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
அந்தக் கும்பலிடமிருந்து தம்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும்கட்சியான திமுகவைக் கடுமையான விமர்சித்தார். அவர் பேசுகையில், `மதுரையில் நடைபயணம் (நடைபயிற்சி) போகவே பயமாக இருக்கிறது. அப்படிப் போனால் ஒருவேளை இடைத்தேர்தல் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது’ என அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பில்லை என்கிற தொனியில் பேசினார். மேலும், அருகிலிருந்த அதிமுக கவுன்சிலர்களை அழைத்து, `நீங்க எல்லாம் நடைபயிற்சிக்குப் போகாதீங்கப்பா’ என்று அறிவுறுத்தினார்.
மேலும், `சமீபகாலமாக தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைப்பற்றி எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் ரவுடியிஸம் அதிகரித்துவிட்டது; போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது என்பதையும் சொல்லி வருகிறார். மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் வரும் 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
எங்கள் ஆட்சியில் மத்திய ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சொன்னபோது, இப்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது குடும்பத்தோடு கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு போராடினார். இப்போது இவர்கள் ஆட்சியில் ஆண்டுக்கொருமுறை என 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்’ என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.