latest news
பௌத்த முறைப்படி இறுதி சடங்கு.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பவானி சுப்பராயன் இருதரப்பு வாதங்களை கேட்டு பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
மேலும் வேறு ஏதாவது ஒரு இடத்தை கூறுங்கள். அதற்கு நான் அனுமதி வழங்குகிறேன் என்று தெரிவித்திருந்தார். இரண்டு முறை வழக்கை ஒத்தி வைத்தார். பிறகு பிற்பகல் 2 15 மணிக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்திருக்கும் உறவினர்கள் பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். முதலில் பௌத்த முறைப்படி இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் சென்று வருகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்று வருகின்றது. மேலும் பெரம்பூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளதால் ஏராளமான தொண்டர்கள் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.