latest news
வாட்ஸப்பில் டிரேடிங் ஆசை… வங்கி ஊழியர் ஒரு கோடிக்கும் மேல் இழந்தது எப்படி?
வாட்ஸப்பில் வந்த டிரேடிங் லிங்கை கிளிக் செய்து ஓய்வுபெற்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற பெண் வங்கி ஊழியர் ஒருவர் ஃபேஸ்புக்கில் டிரேடிங் செயலில் குறித்த விளம்பரத்தைக் கடந்த பிப்ரவரியில் பார்த்திருக்கிறார். ஏற்கனவே பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆர்வத்துடன் இருந்த அவர், அந்த லிங்கை கிளிக் செய்திருக்கிறார்.
இதையடுத்து, அவர் மும்பை பங்குச்சந்தை டிரேடிங் குறித்த ஒரு வாட்ஸப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறார். அதன்பின்னர், அவரைத் தொடர்புகொண்ட சங்கீதா குமாரி என்கிற பெண் விஐபி குரூப் ஒன்றில் இணையும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதன்பின்னர், அவருக்கு சர்வதேச டிரேடிங் கணக்குத் தொடங்குவதற்கான வாய்ப்பு வந்திருப்பதாகக் கூறி, ஆதார் விவரங்களைக் கேட்டிருக்கிறார்.
பின்னர், அவரின் ஆன்ட்ராய்டு போனில் ஒரு செயலியை நிறுவச் செய்திருக்கிறார்கள். உங்கள் டிரேடிங் அக்கவுண்டுக்கு வரியாக ரூ.32 லட்சம் கட்ட வேண்டும் என்று கடந்த மார்ச்சில் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அதன்பின், சர்வதேச டிரேடிங் அக்கவுண்டுக்கு கூடுதல் வரியாக 95 லட்ச ரூபாய் அனுப்பும்படியும், லாபத்தில் கழித்ததுபோக மீத பணத்தை அனுப்புவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், அவ்வளவு பணம் இல்லை என்று கூறி அதை அனுப்ப மறுத்த வங்கி ஊழியர், பின் 30 லட்ச ரூபாயை அனுப்பியிருக்கிறார். அத்தோடு தனது கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுக்க வேண்டும் என்று இவர் கூறியதைக் கேட்டது, கூடுதலாக 5 லட்ச ரூபாய் அனுப்பினால் மட்டும்தான் பணத்தை எடுக்க முடியும் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்.
அப்போதுதான், நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்று அந்த முன்னாள் வங்கி ஊழியருக்குப் புரிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சைபர்கிரைமில் புகார் செய்திருக்கிறார் அந்தப் பெண். இதுபோன்ற மோசடியான வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்திருக்கிறார்கள்.