Cricket
3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் சி.எஸ்.கே. வீரர்.. டோனிக்கு புகழாரம்..!
2023 இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரினை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வெற்றி பெற்று அசத்தியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியின் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா வெற்றியை தேடிக் கொடுத்தார்.
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது சி.எஸ்.கே. ரசிகர்கள் மட்டுமின்றி எம்.எஸ். டோனி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உலகளாவிய கிரிக்கெட் பிரபலங்கள் எம்.எஸ். டோனி மற்றும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றி சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்தி பதிவிட்டனர். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல சி.எஸ்.கே. வீரர்கள் கடும் உழைப்பை கொட்டியிருந்தனர்.
அந்த வகையில், ஷிவம் தூபே சி.எஸ்.கே. அணிக்காக களமிறங்கி 16 போட்டிகளில் 418 ரன்களை குவித்து அசத்தினார். இவரது சராசரி 158.33 ஆக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கையோடு ஷிவம் தூபே தியோதர் கோப்பையிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது பேட்டிங் பற்றிய பேசிய ஷிவம் தூபே கூறியதாவது..,
“என்னால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. நான் எனது போட்டியே அப்கிரேடு செய்திருக்கிறேன். எனக்கு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று நன்றாக தெரியும், ஒரு சூழலில் எப்படி இருக்க வேண்டும், பவுலர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். பல்வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன, அவை அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. ”
“ஆனால், சில மிகப்பெரிய டிப்ஸ்களை நான் பெற்றுக் கொண்டேன். எம்.எஸ். டோனி, இறுதிவரை களத்தில் இருந்து எப்படி போட்டியை முடிக்க முயற்சிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். பேட்டிங்கின் மூலம் அதிக போட்டிகளில் வெற்றி பெற முடியும், இதனால் தொடர்ந்து நம்பிக்கை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
ஐ.பி.எல். மற்றும் தியோதர் தொடர்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். இந்த போட்டிகள் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற இருக்கிறது. இதுதவிர ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஷிவம் தூபேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.